தரம் எனும் மந்திரம்






மதுரையில் ஹைடெக் அராய் என்ற பிரபலமான கம்பெனி இருக்கிறது. இந்திய - ஜப்பான் கூட்டுறவில் ஏற்படுத்தப்பட்ட 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனம். ஜப்பானில் உள்ள அராய் எனும் நிறுவனம் தயாரிக்கும் இயந்திரங்களுக்கு ஸ்பிரிங்குகளை உற்பத்தி செய்து அனுப்பிவருகிறது. தரமாக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொறு ஸ்பிரிங்குக்கும் அலகு அடிப்படையில் விலைக்கு ஜப்பான் நிறுவனம் வாங்கிக்கொள்ளும். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி, எங்களுடைய அறக்கட்டளையின் தலைவராக இருப்பதால் அவரை பல்வேறு நிகழ்வுகளுக்காக அடிக்கடி சந்திப்போம்.

அதுபோன்ற ஒரு சந்திப்பின் போது, ஜப்பானியர்கள் அவருடைய தொழிற்சாலையை பார்வையிட்டதைப் பகிர்ந்துகொண்டார். மதுரை நிறுவனம், ஸ்பிரிங் தயாரிப்புக்கான செலவு கூடியிருப்பதால், அலகுவிலை (Unit Cost) யை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் நிறுவனத்துக்கு அனுப்பினார்கள். அவர்களும், ஒரு குழுவை ஜப்பானிலிருந்து அலகுவிலை மாற்றம் பற்றி ஆய்வு செய்ய அனுப்பினார்கள். வந்தவர்கள், தொழிற்சாலையை முழுவதும் ஆய்ந்தனர். ஸ்பிரிங் தயாரிக்கும் முறை, ஒவ்வொறு நிலையிலும் ஆகும் செலவு ஆகியவற்றை குறித்துக்கொண்டனர். இறுதியான கலந்துரையாடலில், அந்த தொழிற்சாலையின் பல்வேறு நிலைகளில் வேலை செய்யும் பணியாளர் விவரத்தை கேட்டார்கள்.

இவர்களும் பெருமையாக மொத்த தொழிலாளர்கள், அவர்களை நிர்வாகம் செய்யும் அமைப்பு, மிகமுக்கியமாக ஒவ்வொறு நிலையிலும், ஒவ்வொறு துறையிலும் மூன்று ஷிப்டுகளிலும் பணிசெய்யும் உயர்நிலை தரக்கட்டுப்பாட்டாளர்கள் பற்றி எடுத்துரைத்தனர். ஜப்பான் குழு, மிக அதிக அளவில் தரக்கட்டுப்பாட்டாளர்களை நியமித்திருப்பதன் காரணத்தை கேட்டது. இவர்கள், அந்த நடைமுறை மூலம், தரத்தை ஆய்வு செய்து, தரமான பொருட்களை அடுத்த நிலைக்கும், தரமற்ற ஸ்பிரிங்குகளை ஒதுக்கவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனப் பெருமையுடன் கூறினர். கடைசியில், இந்தியாவின் பணவீக்கத்தையும், உற்பத்திக்காகும் செலவுகளை பட்டியலிட்டு அலகுவிலையை உயர்த்த வலியுருத்தினர். வந்திருந்த குழுவும் இவர்களுடைய கருத்தை ஆமோதிப்பது போல்தான் தெரிந்ததாம்.

பின்னர் அந்த குழு ஜப்பான் சென்று, அறிக்கையை தாய் நிறுவனத்துடன் பகிர்ந்த பின்னர், இவர்களுக்கு ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருந்த அலகுவிலையை குறைக்கச்செய்த கடிதம் வந்தது. மதுரை நிறுவனத்துக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு விளக்கம் கேட்டபின், ஜப்பான் நிறுவனம் விலைக்குறைப்புக்கான இரண்டு காரணங்களை பகிர்ந்தது. எல்லா நிலையிலும் தரக்கட்டுப்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அங்கு தொழிலாளர் அளவில் தரமில்லாத பொருட்கள் அதிகம் உற்பத்தியாகிறது, வேஸ்டேஜ் அதிகமாகிறது என்று அர்த்தம். நீங்கள் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து, அதை வீணாக்கம் செய்வதால் ஏற்படும் செலவுகளை ஜப்பான் நிறுவனம் ஏற்றுக்கொள்ளச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அதேபோல், நிதிப்பற்றாக்குறை நிலையிலும் தரக்கட்டுப்பாட்டாளர்கள் நிறைய பேரை வேலைக்கு வைத்து, அவர்களுக்கு மிகஅதிக சம்பளம் கொடுக்கும் நிலையில் நிறுவனம் இயங்குவதால், அந்த நிறுவனத்தில் செம்மையான மனிதவள பயன்பாடு இல்லை என தெரியவருகிறது. தேவையற்ற பதவிகளை ஏற்படுத்தி அதில் பணியாளரை நிரப்பி, அதற்காகும் செலவை மேலே உள்ளவரிடமோ, நுகர்வோரிடமோ திணிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பொட்டில் அடித்தது.

மதுரை நிறுவனம், எதை அவர்களின் சிறப்பம்சமாக நினைத்ததோ அதே விஷயம் அவர்களுக்கு பாதகமானது வருத்தம் தான் என்றாலும், உலகளாவிய உற்பத்திப் பொருளதாரத்தில் ஜப்பானியரின் பார்வையையும், அவர்களின் செயல்வழிச் சார்ந்த அணுகுமுறையையும் வியந்தார். உண்மைதானே...

6 comments:

Sridhar said...

எனக்குத தெரிந்தவர் ஜப்பான் சென்றபோது அங்கு ஒரு தொழிற்சாலையில் தரக்கட்டுபாடு செய்யப்படவில்லை என்பதை கவனித்து விட்டு . ஏன் என்று கேட்டார். அந்த நிறுவன அதிகாரி நீங்களே தர பரிசோதனை செய்து பாருங்கள் என்று பதிலளித்தார். என் நண்பர் சோதனை இயந்திரங்கள் கருவிகள் கொண்டு அரை மணி சோதனை நடத்தினார். எல்லா பொருட்களும் சரியாக இருந்தது.

ஜப்பான் அதிகாரி இவரிடம் வந்து, நாங்கள் கச்சாபொருள் வாங்கும் போதே தேவைக்கு அதிகமான தரத்தில் வாங்குவோம். தயாரிப்பின்போது உயர் தரத்தில் உற்பத்தி செய்வோம். இதற்காக ஒரு தொழிலாளியை அமர்த்தினால் நேரம் விரயமாகும் செலவும் அதிகமாகும் என்றாராம்.

நல்ல பொருட்களை கவனமாக உற்பத்தி செய்தால் விலை குறையும் .
ஸ்ரீதர் s

கே.ஆர்.பி.செந்தில் said...

சிங்கப்பூரில் இருக்கும்போது நான் ஜப்பானிய நிறுவனம் ஒன்றில் இரண்டு வருடம் வேலைப் பார்த்தேன்

அவர்களிடம் கற்றுக் கொண்ட விசயங்கள்தான் இப்போதும் எனக்கு கை கொடுக்கிறது..

ஒரு கோப்பை வாழ்க்கை said...

உண்மை. நல்ல பகிர்வு ஸ்ரீதர். நன்றி.

ஒரு கோப்பை வாழ்க்கை said...

நன்றி செந்தில். ஜப்பானியர்களின் அமைதியுடன் கூடிய அதிரடி எப்பவுமே எனக்கு வியப்பைத் தரும்.

Yuva said...

நல்லவொரு 'Case-Study' க்கான பதிவு. நன்றி...

lcnathan said...

nalla pathivu!

Post a Comment

இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க...