உதயன் ஒரு மிகச்சிறந்த படைத்தளபதி. கையில் வில் பூட்டி, தேரில் எதிரி படைக்கு நடுவில் இறங்கினால் எதிர்த்துப்போரிடுவோரை அதகளம் செய்யும் மாவீரன். அப்படித்தான் ஒரு போரில் தேரினை இலாவகமாக செலுத்திக்கொண்டு எதிரிகளை விரட்டிக்கொண்டிருந்தான். தனியாளாக நின்று எதிர் நாட்டு வீரர்களை சுற்றிச்சுற்றி அடித்துக் கொண்டிருந்தான். போரில் அவனது அசாதாரண வீரத்தால் பெருவெற்றிக்கிடைத்தது.
உதயனை அந்த நாட்டு மக்கள் காக்கவந்த கடவுளாகவே கொண்டாடினர். நாட்டின் அரசர், உதயனுடைய வீரத்தைப் பார்த்து பெருமிதம் கொண்டு அவனுக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள், படைவீரர்கள் முன்னிலையில் நடைபெற்ற அந்த பாராட்டு விழாவில், உதயன் எப்படி தேரையும் செலுத்தி, எதிரியையும் வீழ்த்தினான் என்று விறுவிறுப்புடன் உற்சாகமாய் கூறிக்கொண்டிருந்தான். அவனது ஒவ்வொறு வாக்கியத்துக்கும் மக்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
விழா முடிவுற்று அனைவரும் கலைந்து செல்லும் போது, கூட்டத்தின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த ஒருவர், உதயன் கையைப்பிடித்து "ரொம்ப மகிழ்ச்சி, இந்த வெற்றியால் விஜயனுக்கு சந்தோஷம் தானே" என்றார். உதயனுக்கு ஆச்சரியம். விஜயன், உதயனுடைய 4 வயது மகன். முன்பின் பார்த்திராத ஒருவருக்கு எப்படி தன்னுடைய குடும்பம் பற்றி தெரிந்திருக்கிறது என்று யோசித்தவாறு, அவரை யார் என விசாரித்தான். அவர், தான் உதயனுடைய படைப்பிரிவில் பணிபுரியும் கடைநிலை போர்வீரன் எனவும், உதயனுடைய தேரின் அச்சாணியை பராமரித்து வருவதாகவும் பகிர்ந்துகொண்டார். உதயனை வாழ்த்திவிட்டு விடைபெற்றார். உதயனுக்கு அவரை முன்பு பார்த்தாக நினைவில்லை. யாரோ அறியாத ஒரு சாதாரண போர்வீரனின் பாராட்டைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தார்.
அன்றிரவு உதயனுக்கு உறக்கம் வரவில்லை. ஒரு வேளை இதுவரை தான் கவனிக்காத, எளிமையான அந்தப் படைவீரன் தேரினுடைய அச்சாணியை சரியாக பொருத்தியிருக்கவில்லை என்றால் போர்களத்தில் அவன் நிலை என்னவாயிருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். பயமாய் இருந்தது. அவனுக்குக் கீழே ஆயிரக்கணக்கில் உள்ள படைவீரர்களில் அடையாளம் தெரியாத ஒருவரின் செயல், அவனுடைய வெற்றிக்கு எவ்வளவு முக்கியமாயிருந்தது என்பதை நினைத்துப்பார்த்தான். அவனது வெற்றிக்கும், புகழுக்கும், பாராட்டுக்கும் பின்னால் இது போல சிறு சிறு உதவிகள் செய்த பலர் இருப்பதை உணர்ந்தான். தன்னால் தான் வெற்றி கிடைத்தது என்ற மமதை அப்போதே அழிந்தது.
அடுத்த நாள் அரசவையில் மந்திரிகள், பிற படைத்தளபதிகள், சிறப்பு விருந்தினர்கள் நிரம்பிய அவையில் அவனுக்கு பெரிய பட்டம் கொடுத்து அரசர் பாராட்ட, உதயன் பாராட்டின் ஏற்புரையில், "உங்கள் தேரின் அச்சாணியை பொருத்தியது யார்?" என அவையைப் பார்த்துக் உரக்கக்கேட்டான்.

5 comments:
super
nandri kalanesan.
வழக்கையும் இப்படிதான் பல்வேறு நபர்களின் உதவியின்றி நாம் வாழ முடியாது,
தோற்கும்போது ஆயிரம் காரணம் கண்டுபிடிக்கும் நாம், ஜெயிக்கும்போது ஒரே காரணம்தான் வைத்திருக்கிறோம் ..
அழகான கதை..
வாழ்வில் இந்த நிலையில் இருக்க பலர் காரணம் என்ற உண்மையை உணர்ந்தால் அகந்தை, பெருமை, பொறாமை, காழ்புணர்ச்சி போன்றவை மறையும். வாழ்க்கை சிறக்கும்.
மிக நேர்த்தியான கதை. எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை. வாழ்க இப்பணி
Post a Comment
இத பத்தி நீங்க என்ன சொல்றீங்க...