பார்த்ததில் பிடித்தது: கருந்துளை

video

நீதி: பேப்பர சுவத்திலே ஒட்டும் போது நல்லா பாத்து, ஸ்டாங்கா ஒட்டனும் பிரதர்...

தீதும் நன்றும்

Photo from: deviantart.com




அது ஒரு கடும் மழைக்காலம். இடிமின்னலுடன் பெருமழை பெய்துகொண்டிருந்தது. ஒரு சாலையின் ஓரமாய் அமைந்திருந்த சிறு மண்டபத்தில் மழைக்காக பத்து பதினைந்து பேர் ஒதுங்கியிருந்தனர். மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் ஒரு ஜோசியக்காரர் இருந்தார். மனதுக்குள் ஏதோ கணக்குப் போட்டுவிட்டு, ஐயோ என பதறினார். மற்றவர்கள் என்னவென்று கேட்க, "இந்த கூட்டத்தில் பாபம் செய்தவர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு இப்போது இறுதிகாலம் நெருங்கிவிட்டது. இன்றைய மழையில் இடி அவர் மேல் விழுந்து சாகும் வாய்ப்புள்ளது. நாம் எல்லோரும் கூடியிருப்பதால், நமக்கும் அவரால் ஆபத்து வந்துவிட்டது" என கூறினார். மற்றவர்களுக்கு இப்போது பயம் பிடுங்கியெடுத்தது. எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த கூட்டத்தில் உள்ளுர் கட்சிப் பிரமுகர் ஒருவரும் இருந்தார். அவர் ஒரு யோசனை சொன்னார். "இங்கிருக்கும் யாரோ ஒருவரால், நம் எல்லோருக்கும் ஆபத்து ஏற்படப்போகிறது. அதைத் தவிர்க்க, இங்கே இருக்கும் ஒவ்வொறுவரும் 100 அடித் தொலைவில் எதிர்புறம் அமைந்துள்ள பனைமரத்தை தொட்டுவிட்டு வரவேண்டும். பாவம் செய்தவர் தனியே செல்லும் போது அவர் மீது இடிவிழட்டும். மற்றவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்" என்றார். மற்றவர்கள் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்டனர். ஒவ்வொருவராக வெளியே சென்று அந்த பனைமரத்தைத் தொட்டு திரும்பினார்கள். எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.

கடைசியில் அந்தக்கூட்டத்தில், ஒரு வயதான பெரியவரும், அந்த கட்சிக்காரரும் மீதமிருந்தனர். கட்சிக்காரர், அந்தப் பெரிவரை பனைமரத்தை தொட்டுவிட்டு திரும்பச்சொன்னார். அவர், தான் ஜிரத்துடன் இருப்பதாகவும் நடக்க கஷ்டப்படுவதாகவும் சொல்லி, வெளியே அனுப்பவேண்டாம் என மன்றாடினார். மற்றவர்கள், அதைக்காது கொடுத்தும் கேட்கவில்லை. வலுக்கட்டாயமாக வெளியே தள்ளினார்கள். பெரியவர், வருத்ததுடன் தள்ளாடி நடந்து சென்றார். அவர் மண்டபத்தை விட்டு 50 அடி தள்ளிப் போயிருப்பார். அப்போது "டமால்" என்ற பெருஞ்சப்தத்துடன் மண்டபத்தின் மீது இடி விழுந்து, மண்டபம் நொறுங்கியது. பெரியவர் மட்டும் உயிர் பிழைத்தார்.

குழப்பம்


அது ஒரு பிரபல மேலாண்மைக் கல்லுரி. அந்த செமஸ்டரில் வரிசையாக ஸ்டூடண்ட் செமினார்கள் தினமும் நடந்து கொண்டிருந்தது. ஒருநாளைக்கு ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பாடம் எடுக்கவேண்டும். அன்று குழப்பம் (Confusion) எனும் தலைப்பில் ஒரு மாணவர் வகுப்பை கையாளவேண்டும். குறித்த நேரத்துக்கு முன்பே அந்த மாணவன் வகுப்புக்கு வந்திருந்தான். நிறைய புத்தகங்கள் அவன் முன் குவிந்திருந்தது. தன்னுடைய நோட்டில் தீவிரமாக குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தான்.


வகுப்புக்கான நேரம் துவங்கியது. மற்ற மாணவர்கள், அவனது வகுப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். மதிப்பிடும் ஆசிரியரும் வந்துவிட்டார். வகுப்புக்கான நேரம் கரைந்து கொண்டிருந்தது. அவன் தன்னுடைய இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. சக மாணவர்கள், அவனுக்கு வகுப்பை பற்றி ஞாபகப்படுத்தி வகுப்பெடுக்க துரிதப்படுத்தினர். ஆசிரியரும் கொஞ்சம் கடுப்புடன் அவனைப் பார்த்து, வகுப்பெடுக்க அழைத்தார். இவன் அசைந்து கொடுப்பதாக இல்லை. தொடர்ந்து, அவன் எதோ ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தான்.

மாணவர்களுக்கு பெரிய குழப்பம். பொதுவாக அவன் நன்றாக படிக்கக்கூடிய நல்ல மாணவன். அன்று ஏன் அப்படி செய்கிறான் என புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். வகுப்புக்கான நேரம் ஓடிக்கொண்டிருந்தது. 15 நிமிடம், கரைந்துவிட்டது. இப்போது மாணவர்கள் அவனைப்பார்த்து கத்த ஆரம்பித்தனர். ஆசிரியர் கடைசி எச்சரிக்கை விடுத்தார். அவன் இப்போது வகுப்பெடுக்க வரவில்லையென்றால், அந்த அசைன்மெண்டுக்கான மதிப்பெண் தரப்படாது என்றும் சொல்லிவிட்டார். அப்போதும் அவன் அசைந்து கொடுக்கவில்லை.

கடைசியில், "இன்றைய வகுப்பு கேன்சல் செய்யப்படுகிறது" என சொல்லிவிட்டு ஆசிரியர் எழுந்து வெளியே செல்ல எத்தனித்தபோது, அந்த மாணவன் வேகமாக எழுந்து மேசைக்கு முன் நின்றான். "இன்று நான் எடுக்கவேண்டிய பாடம் முடிவுக்கு வருகிறது" என்று சொல்லிவிட்டு, "நான் பாடம் எடுக்கவராதபோது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?" எனக்கேட்டான். அனைவரும், "ஒரே குழப்பமாக இருந்தது" என்றனர். "அதைத் தான் நான் எதிர்பார்த்தேன், இந்த குழப்பத்தின் போது உங்களின் மனதில் ஓடிய எண்ணங்கள் என்ன" என்று கேட்டு அதிலிருந்தே, குழப்பத்தின் தன்மை, அதனை மேலாண்மை செய்யும் விதம் பற்றி கருத்துக்களை அடுக்கிச்சென்றான். அந்த ஆண்டின் மிகச்சிறந்த வகுப்பாக அது அமைந்திருந்தது.

தரம் எனும் மந்திரம்






மதுரையில் ஹைடெக் அராய் என்ற பிரபலமான கம்பெனி இருக்கிறது. இந்திய - ஜப்பான் கூட்டுறவில் ஏற்படுத்தப்பட்ட 100% ஏற்றுமதி சார்ந்த நிறுவனம். ஜப்பானில் உள்ள அராய் எனும் நிறுவனம் தயாரிக்கும் இயந்திரங்களுக்கு ஸ்பிரிங்குகளை உற்பத்தி செய்து அனுப்பிவருகிறது. தரமாக தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொறு ஸ்பிரிங்குக்கும் அலகு அடிப்படையில் விலைக்கு ஜப்பான் நிறுவனம் வாங்கிக்கொள்ளும். அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி, எங்களுடைய அறக்கட்டளையின் தலைவராக இருப்பதால் அவரை பல்வேறு நிகழ்வுகளுக்காக அடிக்கடி சந்திப்போம்.

அதுபோன்ற ஒரு சந்திப்பின் போது, ஜப்பானியர்கள் அவருடைய தொழிற்சாலையை பார்வையிட்டதைப் பகிர்ந்துகொண்டார். மதுரை நிறுவனம், ஸ்பிரிங் தயாரிப்புக்கான செலவு கூடியிருப்பதால், அலகுவிலை (Unit Cost) யை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் நிறுவனத்துக்கு அனுப்பினார்கள். அவர்களும், ஒரு குழுவை ஜப்பானிலிருந்து அலகுவிலை மாற்றம் பற்றி ஆய்வு செய்ய அனுப்பினார்கள். வந்தவர்கள், தொழிற்சாலையை முழுவதும் ஆய்ந்தனர். ஸ்பிரிங் தயாரிக்கும் முறை, ஒவ்வொறு நிலையிலும் ஆகும் செலவு ஆகியவற்றை குறித்துக்கொண்டனர். இறுதியான கலந்துரையாடலில், அந்த தொழிற்சாலையின் பல்வேறு நிலைகளில் வேலை செய்யும் பணியாளர் விவரத்தை கேட்டார்கள்.

இவர்களும் பெருமையாக மொத்த தொழிலாளர்கள், அவர்களை நிர்வாகம் செய்யும் அமைப்பு, மிகமுக்கியமாக ஒவ்வொறு நிலையிலும், ஒவ்வொறு துறையிலும் மூன்று ஷிப்டுகளிலும் பணிசெய்யும் உயர்நிலை தரக்கட்டுப்பாட்டாளர்கள் பற்றி எடுத்துரைத்தனர். ஜப்பான் குழு, மிக அதிக அளவில் தரக்கட்டுப்பாட்டாளர்களை நியமித்திருப்பதன் காரணத்தை கேட்டது. இவர்கள், அந்த நடைமுறை மூலம், தரத்தை ஆய்வு செய்து, தரமான பொருட்களை அடுத்த நிலைக்கும், தரமற்ற ஸ்பிரிங்குகளை ஒதுக்கவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனப் பெருமையுடன் கூறினர். கடைசியில், இந்தியாவின் பணவீக்கத்தையும், உற்பத்திக்காகும் செலவுகளை பட்டியலிட்டு அலகுவிலையை உயர்த்த வலியுருத்தினர். வந்திருந்த குழுவும் இவர்களுடைய கருத்தை ஆமோதிப்பது போல்தான் தெரிந்ததாம்.

பின்னர் அந்த குழு ஜப்பான் சென்று, அறிக்கையை தாய் நிறுவனத்துடன் பகிர்ந்த பின்னர், இவர்களுக்கு ஏற்கனவே கொடுத்துக்கொண்டிருந்த அலகுவிலையை குறைக்கச்செய்த கடிதம் வந்தது. மதுரை நிறுவனத்துக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு விளக்கம் கேட்டபின், ஜப்பான் நிறுவனம் விலைக்குறைப்புக்கான இரண்டு காரணங்களை பகிர்ந்தது. எல்லா நிலையிலும் தரக்கட்டுப்பாட்டாளர்கள் இருக்கிறார்கள் என்றால், அங்கு தொழிலாளர் அளவில் தரமில்லாத பொருட்கள் அதிகம் உற்பத்தியாகிறது, வேஸ்டேஜ் அதிகமாகிறது என்று அர்த்தம். நீங்கள் தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்து, அதை வீணாக்கம் செய்வதால் ஏற்படும் செலவுகளை ஜப்பான் நிறுவனம் ஏற்றுக்கொள்ளச் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. அதேபோல், நிதிப்பற்றாக்குறை நிலையிலும் தரக்கட்டுப்பாட்டாளர்கள் நிறைய பேரை வேலைக்கு வைத்து, அவர்களுக்கு மிகஅதிக சம்பளம் கொடுக்கும் நிலையில் நிறுவனம் இயங்குவதால், அந்த நிறுவனத்தில் செம்மையான மனிதவள பயன்பாடு இல்லை என தெரியவருகிறது. தேவையற்ற பதவிகளை ஏற்படுத்தி அதில் பணியாளரை நிரப்பி, அதற்காகும் செலவை மேலே உள்ளவரிடமோ, நுகர்வோரிடமோ திணிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பொட்டில் அடித்தது.

மதுரை நிறுவனம், எதை அவர்களின் சிறப்பம்சமாக நினைத்ததோ அதே விஷயம் அவர்களுக்கு பாதகமானது வருத்தம் தான் என்றாலும், உலகளாவிய உற்பத்திப் பொருளதாரத்தில் ஜப்பானியரின் பார்வையையும், அவர்களின் செயல்வழிச் சார்ந்த அணுகுமுறையையும் வியந்தார். உண்மைதானே...

படிக்காத மேதைகள்


ஒருமுறை திருப்பதிக்கு போயிருந்தேன். அதிகாலையில் மொட்டையடித்துவிட்டு பக்கத்திலேயே குளிக்க பாத்ரூம்கள் இருந்தன. எப்பவுமே ஏடுகொண்டலுவாடாவில் கூட்டம் இருக்கும் என்பதால், குளிப்பதற்கான வரிசை மிக நீண்டிருந்தது. நானும் என்னுடைய நண்பர்களும் வரிசையில் இடம் பிடித்துக்கொண்டு நின்றோம். ஒரு பக்கெட் வெந்நீர், ஐந்து ரூபாய். பாத்ரூமுக்கு வெளியில் உள்ள சிப்பந்தியிடம் 5 ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு பக்கெட் தண்ணீரை உள்ளே எடுத்துச்செல்லாம். குளித்து முடித்த பிறகு, வெளியே வெற்று பக்கெட்டை வைத்துவிட வேண்டும்.

வரிசையில் எனக்கு முன் ஒரு எட்டுப்பத்துப் பேர் நின்றிருந்தார்கள். என்னுடைய நிர்வாக மூளைக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. பக்கெட்டை எடுத்து உள்ளே போன பின், அவர் குளித்துமுடித்து வெளியே வருவது குளிப்பவர் கையில் உள்ளது. ரொம்ப நேரம் குளிப்பவர் உள்ளே போனால் வெளியே காத்திருப்பவர் எண்ணிக்கை கூடும். பாத்ரூமை காண்ராக்ட் எடுத்தவருக்கும் வருமானம் குறையும். ஆனால் சொல்லி வைத்தார் போல உள்ளே குளிக்கப் போகுபவர் அதிகபட்சம் 5 நிமிடத்துக்குள் வெளியே வந்துகொண்டிருந்தனர்.

நான் காத்திருப்பதை பழி தீர்த்துக்கொள்ளும் விதமாக எப்படியும் கால் மணி நேரத்துக்கு குறையாமல் வெளியே வரக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டேன். அதிகாலையில், அந்தக்குளிரில் நீண்ட நேரம் குளிப்பது சுகமான விஷயமும் கூட. என்னுடன் வந்திருந்த நண்பர்களிடமும் இதை சவாலாக சொல்லியிருந்தேன்.

என் முறை வந்தது. 5 ரூபாய் கொடுத்துவிட்டு பாத்ரூம் உள்ளே சென்ற நான், 4 நிமிடத்துக்குள்ளாக வெளியே வந்துவிட்டேன். ஒன்னுமில்லைங்க. ரெண்டே தந்திரம் செய்திருந்தார்கள். உள்ளே இருக்கும் பாத்ரூமுக்கு தாழ்பாள் போடவில்லை. அதே போல், கொடுத்த எல்லா பக்கெட்டிலும் கீழே சின்ன துவாரத்தைபோட்டிருந்தார்கள். எப்படி பார்த்தாலும் பக்கெட் தண்ணி, 5 நிமிடத்துக்கு மேல் நிற்காது.

தன்னால் கட்டுப்படுத்தமுடியாத தன்னிச்சையான செயல்பாட்டை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வித்தைப் பற்றி, மாதக்கணக்கில் எம்.பி.ஏவில் பாடம் எடுப்பார்கள். ஆனா, இவிங்கல்லாம் எந்த ஐ.ஐ.எம்மில் நிர்வாகம் படிச்சாங்களோ.